சென்னை: சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்க யார் அதிகாரம் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திமுக கொடுத்த வாக்குறுதியின் படி தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 14 நாட்கள் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களைக் கொஞ்சம் கூட மனிதத் தன்மையின்றி தாக்கி அவர்களைத் தடாலடியாக அப்புறப்படுத்தியது ஆளும் திமுக அரசு.
இருந்தாலும் மனம் தளராது தங்களுடைய வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தை மீண்டும் அறவழியில் தொடர்வது குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை சிந்தாதிரிப்பேட்டை உழைப்பாளர் தினப் பூங்காவில் கூடிய தூய்மைப் பணியாளர்களின் மீது திமுக அரசு மீண்டும் அடக்குமுறையை ஏவி அவர்களைக் கைது செய்துள்ளது.
அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரையும் தரக்குறைவாக நடத்தியதோடு, இதுகுறித்து புகார் அளிக்கச் சென்றதால் கைது செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளது. ஆளும் அரசின் இந்த அதிகாரத் துஷ்பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்குவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது, இதுதான் திமுகவின் சமூகநீதியின் லட்சணமா, ஆளும் அரசு தனது அராஜகப் போக்கால் அழிவை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அனைத்துக்கும் கூடிய விரைவில் முடிவு கட்டப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.