சென்னை: சென்னையில் திருநங்கையர்களுக்கான அரண் இல்லங்கள் அமைப்பதற்கு, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான அறிவிப்பின் போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “திருநங்கைகளுக்கான அரண் எனும் பெயரில் 2 தங்கும் இல்லங்கள் சென்னை மற்றும் மதுரையில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.” என அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரண் இல்லங்கள் அமைப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அத்தொண்டு நிறுவனங்கள் திருநங்கையர் நலனுக்காக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும். திருநங்கையர் தலைமையிலான அல்லது திருநங்கைகள் பெரும்பான்மையாக உள்ள நிர்வாகக்குழுவை கொண்டிருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் திருநங்கையருக்காக செயல்படுத்திய திட்டங்களின் விவரங்கள், பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் திட்டங்களின் தாக்கம் குறித்த விவரங்களை அந்நிறுவனம் அளிக்க வேண்டும்.
இந்திய சட்டங்களில் ஏதாவது ஒன்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவும் இருக்க வேண்டும். அதேபோல் திருநங்கைகளுக்கான இல்லமானது பாதுகாப்பு, பராமரிப்பு, சுகாதாரம், வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். திறன்பயிற்சி அளிப்பதற்கு போதுமான இடவசதியுடன் அமைக்கப்பட வேண்டும். இல்லத்துக்கு தகுதியுடைய ஆற்றுப்படுத்துநர் அல்லது மனநல ஆலோசகர் வாரந்தோறும் வருவதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
இந்த விதிமுறைகளை பின்பற்றி சென்னையில் திருநங்கையர்களுக்கான அரண் இல்லங்களை அமைக்க விருப்பம் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துக்களை, சென்னை மாவட்ட சமூகநல அலுவலர், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை – 01 என்ற முகவரிக்கு வரும் 24-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.