சென்னை: சிங்கப்பூரின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு ‘சிங்கா 60’ கலைத் திருவிழா சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இந்திய-சிங்கப்பூர் ஓவிய, சிற்பக்கலைஞர்களின் படைப்புகள் பார்வையாளர்களை வியக்க வைத்தன.
சிங்கப்பூர் நாட்டின் 60-வது தேசிய தினம் விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலை திருவிழாவை 10 நாட்கள் நடத்துகின்றன. இசை, நாடகம், ஆவணப் படம், அரசியல், கலை, கலாச்சாரம், சமையல், குழு விவாதம், கருத்தரங்கம் என பல்சுவை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இத்திருவிழா அடையாறு பத்மநாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இக்கண்காட்சியை சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங்க் தொடங்கிவைத்து பார்வையிட்டார். அவர் பேசும்போது, “சிங்கப்பூர் தனது 60-வது தேசிய தினத்தை கொண்டாடும் வேளையில் இந்தியா-சிங்கப்பூர் இரு நாடுகளுக்கு இடையிலான 60 ஆண்டு கால ராஜ்ஜிய உறவுகளை கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பலப்படும் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக ‘இந்து தமிழ் திசை ‘இயக்குநர் லட்சுமி ஸ்ரீநாத் வரவேற்று பேசுகையில், ‘‘இந்த நிகழ்ச்சி இந்திய-சிங்கப்பூர் நாடுகளின் கலாச்சார பரிமாற்றங்களின் கொண்டாட்டமாக அமைந்திருக்கும். இந்த கண்காட்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களின் அற்புதமான படைப்புகளை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’’என்று குறிப்பிட்டார். தொடக்கவிழாவில் ‘இந்து தமிழ் திசை’ இயக்குநர்கள் விஜயா அருண், அகிலா விஜய் ஐயங்கார், லாவண்யா வேணுகோபால், போரம் ஆர்ட் கேலரி இயக்குநர் ஷாலினி பிஸ்வஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் நாளில் ‘நகரத்தின் சிந்தனைகள்’ என்ற பெயரில் சிறப்பு ஓவிய-சிற்ப கண்காட்சி இடம்பெற்றது. இந்த கண்காட்சியில் புகழ்பெற்ற ஓவிய – சிற்ப கலைஞர்களான சிங்கப்பூரைச் சேர்ந்த குமாரி நாகப்பன், பி. ஞானா,மகாலட்சுமி கண்ணப்பன், ஆர்யன் அரோரா,இந்தியாவைச் சேர்ந்த கவிதா பத்ரா உள்ளிட்ட கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றன. தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்களையும், கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்ட சிற்பங்களையும் பார்வையாளர்கள் கண்டு வியந்தனர். இந்த கண்காட்சி ஆகஸ்ட்30-ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கண்காட்சியை தொடர்ந்து, ஓவிய கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள் பங்கேற்ற குழு விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வை டெல்லியைச் சேர்ந்த ஓவியம் மற்றும் சிற்ப கலைஞரான பார்வதி நாயர் நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கான பங்குதாரர்களாக சிங்கப்பூர் தூதரகம், டிபிஎஸ் வங்கியும் துணை பங்குதாரர்களாக டிவிஎஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஓலம் அக்ரி, டிரான்ஸ்வோர்ல்டு, நிப்பான் பெயின்ட் அண்ட் எச்ஒய்சி, ராம்ராஜ் காட்டன், லலிதா ஜுவல்லரி,ரெசிடென்சி டவர்ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்கின் டேல்ஸ், மேவெண்டோயர், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகியவையும் உள்ளன.
2-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ராஜாஅண்ணாமலைபுரம் துர்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள ராஜரத்தினம் கலையரங்கில் ‘முச்சந்தி’ என்ற தலைப்பில் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இந்நாடகத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த அகம் தியேட்டர் லேப்குழுவினர் அரங்கேற்றுகிறார்கள்.