சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் `சிங்கா 60′ கலைத் திருவிழாவில் இடம்பெற்ற, சிங்கப்பூர் நாடகக் குழுவின் ‘முச்சந்தி’ நாடகம், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக, கலாச்சாரத்தில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்தியது.
அண்டை நாடான சிங்கப்பூர், 60-வது தேசிய தினத்தை விரைவில் கொண்டாட உள்ளது. இந்நிலையில் ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ ஆகியவை இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலைத் திருவிழாவை 10 நாட்கள் நடத்துகின்றன.
‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக ராஜா அண்ணாமலைபுரம் ராஜரத்தினம் கலையரங்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த அகம் தியேட்டர் லேப் நாடகக் குழுவின் ‘முச்சந்தி’ நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியை பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். `இந்து தமிழ் திசை’ இயக்குநர் அகிலா விஜய் ஐயங்கார், உத்ரா பாம்பே ஞானம், தாரணி கோமல் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
இதில் உன்னி கிருஷ்ணன் பேசும்போது, “இந்தியா-சிங்கப்பூர் நாடுகளிடையே பொருளாதார, வர்த்தக உறவைத் தாண்டி நீண்டகால கலாச்சார இணைப்பும், மொழிரீதியான பிணைப்பும் உள்ளது. இவற்றை பலப்படுத்தும் வகையில் `சிங்கா 60′ நிகழ்ச்சியை நடத்துவதற்காக `தி இந்து’ குழுமத்துக்கும், சிங்கப்பூர் தூதரகத்துக்கும் பாராட்டுகள்” என்றார்.
`இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் பேசும்போது, “தமிழால் இணைவோம் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் `இந்து தமிழ் திசை’ நாளிதழ் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை இணைக்கக்கூடிய பாலமாகத் திகழ்கிறது. `சிங்கா 60′ நிகழ்ச்சி நாடு தாண்டிய தமிழர்களின் உறவுகளை வளர்க்கும் வகையிலும், அவற்றைபலப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. கலைகள் மூலம்தான் நாடுகளிடையிலான உறவுகளை பலப்படுத்தி, ஒன்றிணைக்க முடியும்” என்றார்.
முச்சந்தி நாடகக் கலைஞர்களுக்கு `இந்து தமிழ் திசை’ இயக்குநர் லட்சுமி ஸ்ரீநாத் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில், `இந்து தமிழ் திசை’ இயக்குநர் விஜயா அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் நிறுவன இயக்குநர் இளங்கோ குமணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மனதை வருடும் இசையுடன் அரங்கேற்றப்பட்ட முச்சந்தி நாடகம், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்படும் சமூக, கலாச்சார சிக்கல்கள், தலைமுறை இடைவெளி, வரலாற்றை புதிய கண்ணோட்டத்தில் அணுகுவது போன்றவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது. ஆசிரியர், மாணவர், பெற்றோரின் அன்றாட வாழ்வையும், நவீன கல்விமுறையில் அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும் நகைச்சுவையாக விவரித்தது.
‘சிங்கா 60’ நிகழ்ச்சிக்கான பங்குதாரர்களாக சிங்கப்பூர் தூதரகம், டிபிஎஸ் வங்கியும், துணை பங்குதாரர்களாக டிவிஎஸ், லார்சன் அண்டு டூப்ரோ, ஓலம் அக்ரி, டிரான்ஸ்வோர்ல்டு, நிப்பான் பெயின்ட் அண்ட் எச்ஒய்சி, ராம்ராஜ் காட்டன், லலிதா ஜுவல்லரி, ரெசிடென்சி டவர்ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்கின் டேல்ஸ், மேவெண்டோயர், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகியவையும் உள்ளன.
விழாவின் ஒரு பகுதியாக தி.நகரில் உள்ள தி ரெஸிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் (ஸ்கை) சிங்கப்பூர் உணவுத் திருவிழா கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சிங்கப்பூர், மலேசியா, சீனா உணவு வகைகளை சுவைத்து மகிழலாம். உணவு திருவிழா வரும் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
வரும் 4, 5-ம் தேதிகளில் ஸ்கிரீன் சிட்டி என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இந்திய திரைப்படங்களில் சிங்கப்பூர் எவ்வாறு சித்தரிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து சுவாரசியமாக விவரிக்கப்படும்.