சென்னை: சென்னையில் சட்டம் – ஒழுங்கு நிலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ரவுடிகள், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும், ஆங்காங்கே சில குற்றச் செயல்கள் நடைபெற்று விடுகின்றன. இதையும் முற்றிலும் தடுக்கும் வகையில் போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் திருவல்லிக்கேணி, அடையாறு, பரங்கிமலை, மயிலாப்பூர், புளியந்தோப்பு உட்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கைது விவரம், குண்டர் சட்டத்தில் ரவுடிகளை சிறையில் அடைத்த விவரம், நிலுவையில் உள்ள குற்ற வழக்கு விவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, போலீஸ் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் காவல் ஆணையர் வழங்கினார்.
மேலும், குற்றச்செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதேபோல் போலீஸாரோ, போலீஸ் அதிகாரிகளோ தவறு செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் சிறப்பாக பணி செய்த அதிகாரிகளுக்கு பாராட்டுகளையும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.