சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பரவலாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவானது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் சென்னையில் மழை தொடங்கியது. வடபழனி, பல்லாவரம், அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், அசோக் நகர், தியாகராய நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பதிவானது.
இதில் பெரும்பாலான இடங்களில் சில நிமிடங்களில் 5 சென்டி மீட்டர் அவருக்கு மழை பொழிந்துள்ளது. மந்தைவெளி பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த திடீர் மழைக்கு வெப்பச் சலனமே காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
மழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதனால் வாகனங்கள் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் மெதுவாக சென்றன. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று வேலை நாள் என்பதால் பணிக்கு செல்வோர், பள்ளிக்கு செல்வோர் என மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மழைப் பொழிவு தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.