சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 5-ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளன கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்தமுறையை ஒழிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிப்பை உடனடியாக செயல்படுத்தி நிலுவையுடன் வழங்க வேண்டும்.
22 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உற்பத்தி முதல் விற்பனை வரை திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருவிகளின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். 8 மணி நேரத்துக்கு மேலான வேலை நேரத்துக்கு மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆக.5-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் முடிவு செய்துள்ளது.