சென்னை: சென்னையின் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் இதுவரை 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. 426 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் வசித்தும், வந்து சென்றும் வருகின்றனர்.
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகரினை சிங்காரச் சென்னையாக திகழச் செய்திடும் வகையில் சாலைகள், தெருக்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பாலங்கள், பேருந்து நிறுத்தங்கள், மயான பூமிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் அகற்றுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மண்டலம் 1 முதல் 8 வரையில் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திலும், மண்டலம் 9 முதல் 15 வரை பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்திலும் திடக்கழிவுகள் பல்லாண்டு காலமாக கொட்டப்பட்டு வந்தன.
மாநகர் விரிவாக்கம், மக்கள்தொகை அதிகரிப்பு, வணிக செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் ஆகிய இரண்டு வளாகங்களிலும் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை உருவானது . இதனைத் தொடர்ந்து, பெருங்குடியிலும், கொடுங்கையூரிலும் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தின் 250 ஏக்கர் ஆகும். இதில் 225 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. இதில் 27.50 இலட்சம் மெட்ரிக் டன் அளவில் திடக்கழிவுகள் உள்ளது என கணக்கிடப்பட்டது. இத்திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்றி நிலத்தினை மீட்டெடுக்க ரூ.350.65 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக 6 தொகுப்புகளாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பயோமைனிங் முறையில் திடக்கழிவுகளை அகழ்ந்தெடுத்து அகற்றும் பணிகள் 2022ஆம் ஆண்டு முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 3 தொகுப்புகளில் 15.57 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகளும், இதர 3 தொகுப்புகளில் 9.73 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகளும் என 25.30 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, 94.29 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதர திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அகற்றிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் பரப்பளவு 342.91 ஏக்கர் ஆகும். இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. முதல்வர் ஸ்டாலின், உத்தரவின்படி, ரூபாய் 641 கோடி மதிப்பீட்டில் கொடுங்கையூரில் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து அகற்றும் பணி 6 தொகுப்புகளாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய திடக்கழிவுகள் 66.52 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். அதில் இதுவரை 18.03 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளன. தொகுப்பு 1 மற்றும் 2ன் வாயிலாக சுமார் 3 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
மீட்டெடுக்கப்பட்ட இந்த நிலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் வாயிலாக ரூபாய் 57 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுவேலி அமைத்து குழாய் மூலம் நீர்ப்பாசன வசதியுடன் சுமார் 1500 பசுமை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இவ்வாறாக பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களிலிருந்து இதுவரை 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி 97.29 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.