சென்னை மாநகரத்துக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் வரவில்லை என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் அருண் நேற்று கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
சந்தேக நபர்களைக் கண்டறிய மக்களோடு மக்களாக போலீஸார் மப்டி உடையிலும், சீருடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சென்னை முழுவதும் வாகன சோதனையும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகரத்துக்கு இதுவரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எந்தவொரு அச்சுறுத்தலும் வரவில்லை. நேற்று சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக வரும் வெடிகுண்டு மிரட்டல் உண்மையா ? புரளியா ? என்பதை எங்களால் சுலபமாக கண்டறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.