சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது சகோதரர் அசோக்குமார், இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அந்த உத்தரவில் உள்ள நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரி அசோக்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமெரிக்காவுக்கு தன்னுடன், தனது மனைவிக்கு பதிலாக மகள் வரவுள்ளதாகவும், பயண தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனுமதியளிக்க வேண்டுமென அசோக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அமெரிக்கா சென்ற உடன் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவிப்பதற்கு பதிலாக மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்டு, அசோக்குமார் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகளை மாற்றியமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.