காரைக்குடி: மத்திய அரசு அறிவித்த செட்டிநாடு விமான நிலையத்துக்கு சாத்தியமில்லை என தமிழக அரசு கைவிட்டதால் காரைக்குடி மக்கள் அதிருப்தி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு அரசு கால்நடை பண்ணை 1,907 ஏக்கரில் உள்ளது. இங்கு 2-ம் உலகப் போரின்போது 1944-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 2 நீளமான விமான ஓடுதளங்கள் உள்ளன. அவை தற்போது வரை பெரிய அளவில் சேதமடையாமல் உள்ளன.
காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அடிக்கடி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதுதவிர கல்வி, பணி நிமித்தமாக வெளிநாடு செல்வோரும் அதிகளவில் உள்ளனர். மேலும் காரைக்குடி, செட்டிநாடு, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதிகளில் அடிக்கடி நடக்கும் திரைப்படம், சின்னத்திரை படப் பிடிப்புகளுக்காக திரைத் துறையினரும் அதிகளவில் வரு கின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது மதுரை, திருச்சி விமான நிலையங்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காரைக்குடி பகுதியில் விமான சேவை முக்கிய தேவையாக உள்ளது.
ஏற்கெனவே ‘உடான்’ திட்டத்தில் செட்டிநாட்டில் உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் இந்திய விமான சேவை கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் விமானிகள் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர், எந்த ஒரு மேல்நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து விமான நிலையம் அமைக்க மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். கடந்த பிப்ரவரியில் தமிழகத்தில் உடான் திட்டத்தில் செட்டிநாடு உள்ளிட்ட 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச்சில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம், விமான நிலைய நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் காரைக்குடி தொழில் வணிக கழகத்துக்கு, தமிழக அரசின் தொழில் முதலீடு, மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை செயலர் அருண்ராய் அனுப்பியுள்ள கடித்ததில், ‘செட்டிநாடு அருகே மதுரை, திருச்சி சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மேலும் செட்டிநாட்டில் தற்போது உள்ள ஓடுபாதை தரம், கட்டிடம் இல்லாததை கருத்தில் கொண்டு அங்கு விமானம் நிலையம் அமைக்க சாத்தியமில்லை.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் மூலம் செட்டிநாடு ஓடுதளம் மேம்படுத்தப்பட்டு, விமானிகள் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழக அரசு விமான நிலையத்துக்கு சாத்தியமில்லை என்று கூறியுள்ளதால் காரைக்குடி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆதிஜெகநாதன், தொழில் வணிக கழகத் தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், ஆகியோர் கூறியதாவது: நாங்கள் கடந்த 2023 மே 26-ம் தேதி எழுதிய கடித்துக்கு தற்போது விமான நிலையம் அமைக்க சாத்தியமில்லை என்று அரசு செயலர் பதில் அனுப்பியுள்ளது வேதனையாக உள்ளது. விமானிகள் பயிற்சி மையத்தால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.