சென்னை: இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: ‘கிழக்கின் ட்ராய்’ என அறியப்படும் செஞ்சிக் கோட்டை, இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சோழர் கோயில்கள், மாமல்லபுரம், நீலகிரி மலை ரயில், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றின் வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து கம்பீரமான செஞ்சி மலைக்கோட்டை இப்பட்டியலில் தற்போது இணைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கும் அதன் நிலைத்த பண்பாட்டு மரபுக்கும் பெருமிதத் தருணமாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி மகிழ்ச்சி: இதனிடையே பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இந்த அங்கீகாரத்தால் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த ‘மராட்டிய ராணுவ நிலப்பரப்புகளில்’ 12 கம்பீரமான கோட்டைகள் அடங்கியுள்ளன. அவற்றில் 11 மகாராஷ்டிராவில் உள்ளன. 1 தமிழ்நாட்டில் (செஞ்சி) உள்ளது.
புகழ்பெற்ற மராட்டியப் பேரரசைப் பற்றி நாம் பேசும்போது, அதை நல்லாட்சி, ராணுவ வலிமை, கலாச்சார பெருமை, சமூக நலனில் முக்கியத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துகிறோம். சிறந்த ஆட்சியாளர்கள் எந்த அநீதிக்கும் தலைவணங்க மறுப்பதன் மூலம் நம்மை ஊக்குவிக்கிறார்கள். இந்த கோட்டைகளைப் பார்வையிடவும், மராட்டியப் பேரரசின் வளமான வரலாற்றைப் பற்றி அறியவும் அனைவரையும் நான் இந்தக் கோட்டைகளுக்கு அழைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.