புதுடெல்லி: டெல்லி புறப்பட்டுச் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கெடு விதித்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளை பறித்து பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
மேலும், அவருடன் கோபி, நம்பியூரைச் சேர்ந்த சில நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளர்கள் தொடர்ந்து சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் இருந்து புறப்பட்டு நேற்று காலை கோவை வந்தார். பின்னர் கோவை, பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:“நான் ஹரித்வாரில் உள்ள கோயிலுக்குச் செல்கிறேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க புதுடெல்லி செல்லவில்லை. 9-ம் தேதி செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. ‘கலங்க வேண்டாம்; நியாயமான கோரிக்கையைத் தான் வைத்துள்ளீர்கள்’ என தொண்டர்கள் என்னிடம் சொல்கிறார்கள். எனவே, கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தால் மனம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்துக்கு நான் பதில் கூற முடியாது.
கட்சியின் நன்மைக்காக என் கருத்தை சொன்னேன். பல்வேறு முடிவுகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடுத்துள்ளார். அவர் முடிவுக்கு கருத்து சொல்ல இயலாது. காலம்தான் பதில் சொல்லும். பாஜக தலைவர்களை சந்திக்க நான் ஹரித்வார் செல்லவில்லை. ராமரை சந்திக்கச் செல்கிறேன். வேறு யாரையும் சந்திக்கவில்லை. நாளை பிற்பகல் திரும்புகிறேன். 2 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என்னை சந்தித்துள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, ‘உங்களை அதிமுக நிர்வாகிகள் யாராவது சந்தித்தார்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் ‘நோ கமென்ட்ஸ்’ என்றவர், மீண்டும் அதே கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பியதால் ‘சஸ்பென்ஸ்’ என்றார். மேலும், பழனிசாமி தரப்பில் இருந்து யாராவது பேசினார்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கும், ‘நோ கமென்ட்ஸ்’ எனக் கூறிவிட்டு செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றார்.
செங்கோட்டையன் செல்லும் விமானத்தில், திமுக எம்.பி.க்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), பிரகாஷ் (ஈரோடு) ஆகியோரும் சென்றனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு குறித்து நடந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்காக புதுடெல்லி செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் டெல்லியில் முகாமிட்டுள்ள செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் சலசலப்பு குறித்து அமித்ஷா கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.