சென்னை: “கடந்த மூன்றரை ஆண்டு காலமாக கட்சி இணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என சொல்லி வருகிறேன். இதன் முன்முயற்சியை எடுத்துள்ள செங்கோட்டையனுக்கு என் வாழ்த்துகள்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கெடு விதிக்க, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை பறித்து நடவடிக்கை எடுத்தார் பழனிசாமி. இதனிடையே, டெல்லி சென்றிருந்த செங்கோட்டையன் அங்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்து கூறியுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “செங்கோட்டையனின் எண்ணம், செயல் வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பிதுரை கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. கடந்த மூன்றரை ஆண்டு காலமாக கட்சி இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என சொல்லி வருகிறேன். இதன் முன்முயற்சியை செங்கோட்டையன் எடுத்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.
இன்று குடியரசு துணை தலைவராக பதவி ஏற்க இருக்கும் சிபி ராதாகிருஷ்ணன் மிகவும் கண்ணியமானவர். அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடிய பெருந்தகை. அவருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அவருடைய பெயர் அறிவிக்கப்பட உடனேயே அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன். நயினார் நாகேந்திரனிடம் எனது போன் எண் உள்ளது; அவர் என்னை தொடர்பு கொள்ளட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.