சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளரும், முன்னாள் எம்.பி.யுமான சத்தியபாமாவையும் கட்சி பொறுப்புகளில் இருந்து பொதுச்செயலாளர் பழனிசாமி நீக்கியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 2025-ம் ஆண்டு தொடக்கம் முதலே பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்தார்.
கோவையில் விவசாயிகள் சங்கம் சார்பில் பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில், ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக்கூறி புறக்கணித்தார். பழனிசாமி மீதான அதிருப்தி தொடர்பாக டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசினார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட பழனிசாமியை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து வந்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பான எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் கடந்த செப்.5-ம் தேதி கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும். இல்லாவிட்டால், பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயணத்தில் பங்கேற்கமாட்டேன். பிரிந்து சென்றவர்களை நான் ஒன்றிணைப்பேன்” என அறிவித்திருந்தார்.
பழனிசாமிக்கு கடிதம்: இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல்லில் மூத்த அதிமுக தலைவர்களுடன் ஆலோசித்த பழனிசாமி, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 7 பேரின் கட்சி பதவிகளை பறித்து, பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டையனின் ஆதரவாளரும், முன்னாள் எம்.பி.யுமான சத்தியபாமா உள்ளிட்டோர் தங்கள் பதவிகளையும் பறிக்குமாறு பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் சத்தியபாமாவின் கட்சி பதவிகளையும் பழனிசாமி பறித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் ஏ.சத்தியபாமா, இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.