சாலையோர வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட “ஸ்மார்ட்” கடைகள் பயன்படுத்தப்படாமல் செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகளில் குப்பை போல் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோர நடைபாதை வியாபாரிகள் இந்த கடைகளை தங்களுக்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், நகராட்சி பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இதில் சாலையோர வியாபாரிகளுக்கு, 5 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட, “ஸ்மார்ட்” கடைகள் எனும் பெட்டிக்கடைகள் வழங்க திட்டமிடப்பட்டது. இந்த “ஸ்மார்ட்” கடை அமைப்புகளின் பக்கவாட்டுகளில் உலோகம் மற்றும் முன்பக்கம் கதவுகளை கொண்டதாகும்.

புதைந்துள்ள “ஸ்மார்ட்” கடைகள்
இந்த “ஸ்மார்ட்” கடை பயன்படுத்தும் வியாபாரிகள், அனுமதிக்கப்பட்ட சாலையோரங்களில், இந்த கடைகள் வாயிலாக வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் “ஸ்மார்ட்” கடைகளை வியாபாரிகளுக்கு வழங்காமல் பழுதாகி, பயனற்று கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மறைமலை நகர், மதுராந்தகம் ஆகிய நகராட்சிகளில் முடங்கி கிடக்கின்றன.
சில கடை அமைப்புகள் முற்றிலும் சிதலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. பெரும்பாலானவை குப்பை குவியல் போல் கடந்த, 2½ ஆண்டுகளாக கவனிப்பாரற்று உள்ளதாகவும், அது கரையானுக்கு இரையாவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட இந்த “ஸ்மார்ட்” கடை அமைப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் பாண்டியன் கூறியது: சாலையோரமாக உணவு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என அனைவரும் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கக்கூடிய சொற்ப வருமானத்தை வைத்துதான் அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் “ஸ்மார்ட்” கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சாலையோரம் வியாபாரம் செய்வோருக்கு “ஸ்மார்ட்” கடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளுக்கு வழங்கப்பட்ட “ஸ்மார்ட்” கடைகள் அனைத்தும் பயன்படுத்தாமல், அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக செங்கல்பட்டு நகராட்சியில் வழங்கப்பட்டுள்ள “ஸ்மார்ட்” கடைகள் பயன்படுத்தப்படாமல் மண்ணுக்குள் புதைந்து, பயனற்ற நிலையில் உள்ளது.
வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதனை சரியாக செயல்படுத்தாததால் பொதுமக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள “ஸ்மார்ட்” கடைகள் தற்போது வீணாகி வருகிறது. அரசு இதில் தலையிட்டு சாலையோர வியாபாரிகளுக்கு இந்த கடைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.