சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை திமுக மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் அதிரடியாக கைதுசெய்யப் பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிமுக-வினருக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவதால் அடுத்தகட்ட விசாரணை அதுகுறித்தும் நகர்வதாகச் சொல்கிறார்கள்.
மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள், அதிகாரிகள் துணையோடு பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்துவரி முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சை வெடித்ததால் மண்டலத் தலைவர்கள் அனைவரிடமும் அவசரகதியில் ராஜினாமா கடிதங்களை எழுதி வாங்கியது திமுக தலைமை. தொடர்ந்து, இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதிமுக முக்கிய பிரமுகர்களின் வணிகக் கட்டிடங்களுக்கு திமுக-வினர் தாராளமாக வரிக்குறைப்பு செய்து கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வருவதால் அதுகுறித்தும் இப்போது விசாரணை நீள்கிறது.
தனது வார்டு பெண்களுக்கானதாக ஒதுக்கப்பட்டதால் அங்கே தனக்குப் பதிலாக தனது மனைவியை நிறுத்தி ஜெயிக்க வைத்த பொன்.வசந்த், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தயவில் மனைவியை மேயர் இருக்கையிலும் அமரவைத்தார். ஆனால், மனைவியை மேயர் இருக்கையில் உட்காரவைத்துவிட்டு வசந்த் தான் ஆக்டிங் மேயராக மதுரையை வலம் வந்தார்.
அதிகாரம் கையில் இருக்கும் தைரியத்தில் சொந்தக் கட்சியினர் மத்தியிலும் வசந்த் தனது டாம்பீகத்தைக் காட்டியதால் விரைவிலேயே அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் வேண்டாதவராகிப் போனார். விளைவு, இந்திராணியை மேயராக்க வழிமொழிந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனே இப்போது வசந்துக்காக வக்காலத்து வாங்கவில்லை.
முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவரான வரிக்கண்ணன் அளித்த வாக்குமூலத்தில், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வியின் கணவரும் முன்னாள் திமுக துணை மேயருமான மிசா பாண்டியன், 2 திமுக கவுன்சிலர்கள், மதிமுக கவுன்சிலர் பாஸ்கரன் ஆகியோருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகவும், அதிமுக-வைச் சேர்ந்த மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜாவும் ஒரு கட்டிடத்திற்கு சொத்துவரி குறைப்பு செய்ததில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறாராம். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பொன்.வசந்தை சென்னை வரைக்கும் தேடி வந்து கைது செய்திருக்கிறது போலீஸ்.

இதுகுறித்து நாம் சோலை ராஜாவிடம் பேசியபோது, “மாமன்றக் கூட்டத்தில் ஒரு வருடத்திற்கு முன்பே வரி முறைகேடு புகாரை முதலில் எழுப்பியதே நாங்கள் தான். இந்த முறைகேட்டை எங்கள் பொதுச்செயலாளரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதுடன் இதைக் கண்டித்தும், இது தொடர்பாக மேயரிடமும் விசாரணை நடத்தக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இப்போது மேயரின் கணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், இந்த மெகா மோசடியை வெளிக்கொண்டு வந்த எனது நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக திமுக-வினர் திட்டமிட்டு எனது பெயரையும் வாக்குமூலத்தில் சேர்த்திருக்கலாம். ஆனால், மடியில் கனமில்லாததால் எனக்கு எந்தப் பயமும் இல்லை. விசாரணைக்கு அழைத்தால் தைரியமாகச் சென்று எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்வேன்” என்றார்.
வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரோ, “இந்த வழக்கில் வெறும் வாக்குமூலத்தை மட்டுமே வைத்து நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. முறைகேடு தொடர்பான ஆன்லைன் ஆவணங்கள், சிபாரிசு கடிதங்கள், செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றையும் ஆய்வுசெய்த பிறகே கைது நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். வழக்கிலிருந்து யாரும் தப்பிவிடக் கூடாது என்பதால், வரிக்குறைப்புக்கு சிபாரிசுக்குச் சென்ற கட்டிட உரிமையாளர்கள் மூலமே முறைகேடு தொடர்பான ஆதாரங்களை திரட்டி இருக்கிறோம்” என்றனர்.
இதனிடையே, மேயரின் கணவர் கழுத்தை இறுக்கி இருக்கும் இந்த விவகாரம் மேயரையும் இருக்கையில் நிம்மதியாய் இருக்கவிடாது என்பதால் அவரது இடத்தைப் பிடிக்க திமுக பெண் கவுன்சிலர்கள் சிலர் மாவட்ட அமைச்சர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் சுற்றிவர ஆரம்பித்திருக்கிறார்கள்!