ராமேசுவரம்: கச்சத்தீவுக்கு விரைவில் சுற்றுலா திட்டம் கொண்டு வருவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது, என இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் புதியதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசா நாயக்க அன்று மாலை கச்சதீவில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனிடையே, அதிபரின் கச்சத்தீவு பயம் குறித்து யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ”கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் பற்றி கடற்படையினரிடம் கேட்டறிந்தோம்.
இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குரிய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அதனை கச்சத்தீவு வரை நீட்டிப்பதற்கான திட்டம் உள்ளது.
அந்த வகையில் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் சுற்றுலா திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது” என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறினார்.