சென்னை: அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை சுதந்திர தினத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் தமிழக சுகாதாரத் துறை முன்னணியில் உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 8-வது முறையாக சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்று தமிழகம் சாதனை படைத்துள்ளது. ஆனால், தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் வழங்கப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.
சுதந்திர இந்தியாவில் அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்துக்காக நீண்டகாலமாக போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன் அடிப்படையில் அரசு மருத்துவர்
களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.
கரோனா பேரிடரில் பணியாற்றி, உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.