ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் சுதந்திர தினமான இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
கடந்த 2 மாதங்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆறு மாதம், ஒரு ஆண்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர்.
இந்நிலையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்ற தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நடத்தி வருகின்றனர். புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினமான இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடம் வலசை தெருவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமை வகித்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கடந்த 42 ஆண்டுகளாக நீடித்து வரும் மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.