மதுரை: தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவர் குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யவும், அதுவரை விசாரணைக்கு தடைகோரி சீமான் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரியாகெளரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் மனுவுக்கு டிஜஜி வருண்குமார் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்ப்டடது. அதற்கு அனுமதி வழங்கி விசாரணையை ஆக. 12-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.