சிவகங்கை: நடிகர் சிவாஜியை விட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறமையாக நடிக்கிறார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் அக்.13-ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிவகங்கையில் மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்றது. நகரத் தலைவர் உதயா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா கூறியது: ”மதுரையில் அக்.12-ம் தேதி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். அக்.13-ம் தேதி காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் செய்கிறார். கரூரில் துயர சம்பவத்துக்கு மாநில அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுககாரர் போல் செயல்படுகிறார். அவரை பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் 60 பேர் உயிரிழந்தபோது சென்று பார்க்காத முதல்வர், கரூருக்கு மட்டும் ஏன் உடனடியாக சென்றார்? அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நடிகர் சிவாஜியை விட திறமையாக நடிக்கிறார். முதல்வர் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசுகிறார். காங்கிரஸ், திமுக சேர்ந்து கொடுத்த கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பேசுகிறார்.
திமுக அரசிடம் நேர்மை கிடையாது. காங்கிரஸ், திமுக நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டு, அதை திமுகவே நீக்க சொல்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 6,700 படுகொலைகள் நடந்துள்ளன. திமுக அமைச்சர்கள் 15 பேர் ஊழல் வழக்கை எதிர்கொள்கின்றனர். திமுகவை எதிர்த்து கட்சி தொடங்கிய கமல்ஹாசன் எம்.பி பதவிக்காக விலை போய்விட்டார். திமுக அரசு எதிர்க்கருத்தே வரக்கூடாது என்று நினைக்கிறது. அரசுக்கு எதிராக பேசுவோரை கைது செய்கின்றனர். திமுக அணைய போகும் விளக்கு. திருமாவளவன் ஆதிதிராவிடர் மக்களை பற்றி கவலைப்படும் தலைவர் இல்லை” என்று ஹெச்.ராஜா கூறினார்.