சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தடை கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தாக்கல் செய்த வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தவெக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பதிவுத்துறையில், தங்கள் அமைப்பின் வணிக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கொள்கை அடையாளமாகவே அரசியல் கட்சி கொடியை பயன்படுத்துகிறது. இதில் வர்த்தக நடவடிக்கையோ, பொருளாதார பரிவர்த்தனையோ ஏதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தவெக எந்த வர்த்தகத்திலும், வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. நடிகர் விஜய், அரசியலில் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்ற அற்ப காரணத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
கட்சியினருடன் விரிவான விவாதங்கள் நடத்தி வடிவமைக்கப்பட்டுள்ள தவெக கட்சிக் கொடி என்பது வெறும் ஆபரணமல்ல; தமிழ் வரலாறு, கலாச்சாரம், அரசியலை உள்ளடக்கிய கொள்கை வடிவமைப்பு. புரட்சியை குறிக்க சிவப்பும், நம்பிக்கையை குறிக்க மஞ்சளும் பயன்படுத்தப்பட்டுள்ளது என பதில்மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நிறங்களை பயன்படுத்துவதற்கு இதுபோன்ற விளக்கங்களை மனுதாரர், வணிக முத்திரை பதிவின் போது அளித்துள்ளாரா என, தவெக தனது பதில்மனுவில் கேள்வி எழுப்பியுள்ளது.
தவெக கொடியில் சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறங்களை பயன்படுத்த தடை விதித்தால், அது கட்சியின் அரசியல் இருப்பையே பாதிக்கச் செய்யும். வணிக முத்திரை என்பது, சங்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அதிக அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, தவெக பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்