சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்றது.
சிவகாசியில் உள்ள இரு பிரபல பட்டாசு நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், சிவகாசியில் இருந்து வட மாநிலங்களுக்கு பட்டாசுகளை கொண்டு செல்லும் இரு ட்ரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 10 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பட்டாசு விற்பனை, வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை சேகரித்த வருமான வரித் துறையினர், அது குறித்து உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் விசாரணையில் நடத்தினர்.
நேற்று நள்ளிரவு வரை சோதனை நடந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று காலை 10 மணி முதல் 7 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையை தொடர்ந்தனர். டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் எவ்வளவு பட்டாசுகள் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது, யாரிடம் இருந்து யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்ற விவரங்களை ஆய்வு செய்தனர்.
இந்தியாவின் மொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்திற்கும் மேல் சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு நடைபெறும் பட்டாசு வர்த்தகத்தில் 90 சதவீதம் வர்த்தகம் வட மாநிலங்களில் நடப்பது குறிப்பிடத்தக்கது.