சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நாரணாபுரம் – அனுப்பங்குளம் சாலையில் ஶ்ரீ மாரியம்மன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (பெசோ) உரிமம் பெற்று இந்த பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். பிற்பகல் 3.40 மணி அளவில் பேன்சி நவீன பட்டாசுக்கு தேவையான மணி மருந்து கொண்டு செல்லும்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானத்தில், அங்கு பணிபுரிந்த முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த கார்த்திகேயன் (24), லட்சுமி (45), சங்கீதா (40) ஆகிய 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், அருகே உள்ள அறைகளுக்கும் தீ பரவியதில் 6 அறைகள் சேதமடைந்தது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த முனியசாமி மனைவி நாகலட்சுமி (55), தங்கராஜ் மனைவி மாரியம்மாள்(50) ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து பெசோ அதிகாரிகள், வருவாய்த் துறையினர் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். விபத்து குறித்து ஆலை உரிமையாளர் சீனிவாசன், மேலாளர், போர்மேன் ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதல்வர் நிதியுதவி அறிவிப்பு: இந்த விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000-ஐ முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.