சிவகாசி: சிவகாசி அருகே ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு கேட்டும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப் பள்ளியில் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியர் சண்முக சுந்தரத்தை நேற்று முன்தினம் மாணவர்கள் இருவர் பாட்டிலால் தாக்கினர்.
ஆசிரியரை தாக்கிய 2 மாணவர்களை கைது செய்த போலீஸார், சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இதே பள்ளியில் 2023 டிசம்பரில் ஆசிரியரை 2 மாணவர்கள் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பணி பாதுகாப்பு கேட்டு பள்ளி முன்பாக ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் கல்வி அலுவலர் சுரேஷ் மற்றும் போலீஸார் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.