கும்பகோணம்: சென்னையில் உள்ள சிலைகளுக்கான இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை, சுவாமி மலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஐம்பொன் சிலை வடிவமைப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் ஐம்பொன் உலோகச் சிலை வடிவமைப்புப் பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,000-க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் 25-க்கும் அதிகமான சிலை வடிவமைப்பாளர்கள், விசேஷ நாட்கள் மட்டுமின்றி தினமும் வெளிநாடுகளுக்கு சிலைகளை அனுப்பி வருகின்றனர். இங்கு வடிவமைக்கும் சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப சென்னை தலைமைச் செயலகத் தில் உள்ள சிலைகளுக்கான இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தில் சான்றிதழ் பெறுவது அவசியம்.
பழமையான சிலைகள்போல வடிவமைத்ததற்கு மட்டும் ஏற்கெனவே சான்றிதழ் பெற்று வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாலிஷ் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளுக்கும் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை சென்று சான்றிதழ் பெறுவதில் பயணம், தங்குமிடம் உள்ளிட்ட கூடுதல் செலவினம் ஆவதுடன், வெளிநாடுகளுக்கு சிலைகளை அனுப்ப காலதாமதம் ஆகிறது என சுவாமி மலை சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சிலைகளுக்கு சான்றிதழ் வழங்குவதில் பழைய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்றும், சென்னையில் உள்ள சிலைகளுக்கான இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை சுவாமிமலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து சுவாமிமலை உலோக சிற்பக் கலைஞர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் எஸ்.சுரேஷ் கூறியது: சுவாமிமலையில் இருந்து மாதந்தோறும் 100-க்கும் அதிகமான சிலைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
முந்தைய ஆண்டுகளில் பழமையான சிலைகள்போல வடிவமைத்ததற்கு மட்டும் சான்றிதழ் பெற வேண்டியிருந்த நிலையில், கோயில் சிலைகள் திருட்டு வழக்குகளின் தொடர்ச்சியாக பாலிஷ் செய்த சிலைகளுக்கும் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக் கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்காக காத்திருப்பு: இதையடுத்து, சென்னைக்கு கொண்டு செல்லப்படும் சிலைகளை, டெல்லியில் இருந்து அதிகாரிகள் 2 பேர் வந்து ஆய்வு செய்து, சிலை வடிவமைப்பாளர் களிடம் விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.
அதேவேளையில், குறைந்த எண்ணிக்கையில் சிலைகளுக்கு சான்றிதழ் பெறச் சென்றால், டெல்லியில் இருந்து அதிகாரிகள் வருவதில்லை. அதிக சிலைகள் இருந்தால் மட்டுமே அவர்கள் வருவார்கள். இதனால், அவர்கள் வருகைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்காக குறைந்த பட்சம் 5 நாட்கள் ஆகிறது.
குறிப்பாக, பெரிய சிலைகளை பேக்கிங் செய்து சென்னை கொண்டு சென்று திரும்புவதில் பேக்கிங் கூலி, தொழிலாளர்கள் கூலி, போக்குவரத்து, உணவு, தங்குமிடம் போன்ற செலவினங்கள் காரணமாக லாபம் கிடைப்பது அரிதாகி வருகிறது.
சிலை வடிவமைக்கப்படும் காலத்தில் திடீரென மூலப்பொருட்கள் விலை உயர்ந்து, கூடுதல் தொகை கேட்டால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி யடைகின்றனர். இதனால் மீண்டும் ஆர்டர் வழங்குவதில்லை.
எனவே, சுவாமிமலை சிலைவடிவமைப்பாளர்களின் சிரமத்தையும், அவர்கள் சந்திக்கும் இடையூறுகளையும் கருத்தில்கொண்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சிலைகளுக்கான இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை சுவாமிமலைக்கு மத்திய அரசு விரைந்து மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.