சிலரின் குறுகிய அரசியல் லாப நோக்கத்துக்காக மக்களின் நலன் சமரசம் செய்யப்படுகிறது என்று மதுரை மாநகராட்சி விவகாரத்தில் எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம், நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகையுடைய 40 நகரங்களின் பட்டியலில் மதுரை 40-வதாக கடைசி இடத்தில் உள்ளது.
மாநில அளவிலும் 651 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மதுரை 543-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் மதுரை நகரத்தின் தூய்மை மோசமாக உள்ளதை அறியலாம். மதுரை மாநகராட்சியில் 4 ஆண்டுகளில் 6 ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சிலரின் குறுகிய அரசியல் லாப நோக்கத்துக்காக மக்களின் நலன் தொடர்ந்து சமரசம் செய்யப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் தக்காராக கருமுத்து கண்ணன் இருந்த போது, நாட்டிலேயே சிறந்த முறையில் தூய்மையாக பராமரிக்கப்படும் கோயிலாக மீனாட்சி அம்மன் கோயில் தேர்வானது.
அதிக திருவிழா நடக்கும் கோயிலை, நாட்டிலேயே தூய்மையான கோயிலாக மாற்றி காட்டினார். பல லட்சம் பேர் வரும் கோயிலை தூய்மையாக நிர்வகித்தபோது, மதுரை நகரை தூய்மையாக நிர்வகிப்பது கடினமல்ல. இப்புள்ளி விவரம் வெளிவந்த பிறகாவது மதுரை மாநகராட்சி விழிப்போடு செயல்பட வேண்டும்.
மாநில நகராட்சித் துறை அமைச்சர் முன்னிலையில் மதுரையை சேர்ந்த அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநகராட்சி சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும். தனியார் நிறுவனத்தின் செயல்திறன், தூய்மைப் பணியாளர் நிலை, விழிப்புணர்வு என சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும். மதுரை நகரத்தின் தூய்மையைப் பேணி காக்க தமிழக முதல்வர் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.