கோவை: கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையை, கேரள அரசு பராமரிக்கிறது. அணையின் நீர்த்தேக்க அளவு 49.53 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 44.61 அடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால், நீர்மட்டம் 44 அடியை நெருங்கும் முன்பே கேரள நீர்வளத்துறையினர் கீழ் மதகு வழியாக தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.
அணையில் முழு கொள்ளளவுக்கும் நீர் தேக்கப்படாத நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 44.61 அடி வரையாவது நீரை தேக்க வேண்டும். இல்லாவிட்டால் கோடையில் மாநகருக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “சிறுவாணி அணைப் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை நெருங்கும் சமயத்தில், அணையிலிருந்து கேரள நீர்வளத்துறையினரால் இன்று தண்ணீர் திறந்து விடப் பட்டது. நீர் வரத்தை பொருத்தே, அதிகாரிகள் தண்ணீரை திறந்து வெளியேற்றுகின்றனர்.
தற்போதைய சூழலில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பருவமழை இறுதிக் காலத்தில் 45 அடிக்கு நீர் தேக்கும் போது, கோடைக் காலத்தில் தட்டுப்பாடு இருக்காது. இன்று காலை சிறுவாணி அணையில் 147 மி.மீ, அடிவாரத்தில் 79 மி.மீ மழை பெய்துள்ளது. அணையிலிருந்து 100 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டது” என்றனர்.