சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், நாளை (ஜூலை 24) விசாரணைக்கு ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் திருமண விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜா, முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரி, மணிகண்டன், கணேசன், வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை திருவாலங்காடு போலீஸார் கடந்த ஜூன் 13-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் மற்றும் கே.வி.குப்பம் எம்எல்ஏ- வான பூவை ஜெகன்மூர்த்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. போலீஸார் பூவை ஜெகன்மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த கடத்தல் வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், கைதான வனராஜா, மணிகண்டன், கணேசன் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விவேகானந்தன் ஆஜராகி மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும், என கோரினார்.
அப்போது நீதிபதி, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்த பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமை ஒருமுறைகூட விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் பிறப்பிக்காதது ஏன் என கேள்வி எழுப்பி, வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்போவதாக தெரிவித்தார்.
அதற்கு சிபிசிஐடி போலீஸார் தரப்பில் ஆஜரான அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆகியோர், “இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம், ஜூலை 24-ம் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றனர். அதையடுத்து நீதிபதி, ஜாமீன் கோரிய வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.