சிறுமுகை அருகே நீரில் மூழ்கத் தொடங்கிய காந்தையாறு பாலத்தால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. இதனால் கிராம மக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், லிங்காபுரம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பவானியாற்றில் இணையும் காட்டாறான காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள மறுகரையில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தையூர், மொக்கைமேடு, உளியூர் ஆகிய மலையடிவார கிராமங்கள் உள்ளன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், விவசாயப் பொருட்கள் விற்பனை என அனைத்து தேவைகளுக்கும் காந்தையாற்றை கடந்து லிங்காபுரத்தை அடைந்த பின்னரே நகரப் பகுதிக்கு செல்ல இயலும்.
கடந்த 2005-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில், ரூ.4 கோடி மதிப்பில் காந்தையாற்றின் குறுக்கே 20 அடி உயரத்தில் பாலம் கட்டப்பட்டது. ஆனால் மழைக்காலத்தில் காட்டாறுகளில் நீர் வரத்து அதிகரிப்பு, பில்லூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்படுவது போன்ற காரணங்களினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, எப்போதெல்லாம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயரம் 97 அடியை கடக்கிறதோ அப்போதெல்லாம் இந்த காந்தையாற்று பாலம் நீருக்கடியில் மூழ்கத் தொடங்கி விடும்.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழையின் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்ததால் நேற்றிலிருந்து இப்பாலம் நீருக்குள் மூழ்கத் தொடங்கியுள்ளது. இதனால் பாலத்தில் வாகனப் போக்குவரத்து முடங்கியது. இதனால் காட்டாற்றை கடந்து செல்ல மீண்டும் பரிசல்களையே இப்பகுதி மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘லிங்காபுரம் – காந்தவயல் இடையே உள்ள காந்தையாற்றை கடக்க புதிய உயர் மட்டப் பாலம் ரூ.15.40 கோடி மதிப்பில் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி தற்போது 70 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. மந்தமாக நடக்கும் இப்பணியை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும்’’ என்றனர்.