விழுப்புரம்: “சிறுபான்மை மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினரை அரண் போல் பாதுகாக்கப் பட்டனர்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் இன்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களிடையே பேசியது: “ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். நன்மைகள் கிடையாது. ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள திமுக ஆட்சி திட்டமிடாததால் விழுப்புரம் நகரம் தண்ணீரில் மிதந்தது. தானே புயல் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் புயல் வேகத்தில் அதிமுக அரசு செயல்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து அதிகாலை 2.45 மணிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டதால், கரையோரம் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதிமுக ஆட்சியில் 2 முறை கூட்டுறவு சங்களில் பெற்ற விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெய லலிதா பல்கலைக் கழகத்தை, மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் திமுக ஆட்சி ரத்து செய்துவிட்டது. ரத்து செய்வதற்கு காரணமான வரின் (பொன்முடி) அமைச்சர் பதவியை ஆண்டவன் பறித்து விட்டார். ரூ.1,503 கோடியில் கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்துக்கு, விழுப்புரத்தில் அடிக்கல் நாட்டினேன். இதையும் திமுக ஆட்சி ரத்து செய்துவிட்டது.
இந்து சமய அறநிலையத் துறை மூலம் 9 கல்லூரிகள் தொடங்கப்படும் என கூறுகின்றனர். கல்லூரிகள் அவசியம். ஆனால், எதிர்காலத்தில் கல்லூரிகள் வளர்ச்சிக்கு நிதி கிடைக்காது. பல்கலைக்கழகங்களில் 41 உறுப்பு கல்லூரிகள் மற்றும் நாமக்கலில் கூட்டுறவு சங்கத்தின் பாலி டெக்னிக் கல்லூரியை, அரசு கல்லூரியாக மாற்றினோம். கல்லூரி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாததால் மாற்றம் செய்தோம். இந்த நிலை, இந்து சமய அறநிலைத் துறை மூலம் தொடங்கப்படும் கல்லூரிகளுக்கு வரக் கூடாது என்பதற்காக அரசு கல்லூரிகளை தொடங்க சொல்கிறோம்.
கடலில் தந்தைக்கு பேனா வைக்க ரூ.80 கோடி, கார் பந்தயம் மகன் நடத்துவதற்கு ரூ.42 கோடி நிதி உள்ளது. ஏழை மாணவர்கள் படிக்க அரசு கல்லூரிகள் தொடங்க நிதி இல்லையா ? ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி மருத்துவ கனவை நனவாக்கி உள்ளோம்.
விழுப்புரத்தில் முதுகலை விரிவாக்க மையத்துக்காக ரூ.5 கோடியில் கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் தரவில்லை. வரும் 14-ம் தேதி வரை காலக்கெடு விதிக்கிறோம். இல்லையென்றால், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஏழை மாணவர்கள் முதுகலை படிக்கக் கூடாதா ?
மக்கள் விரோத திமுக அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 180 அரசு கல்லூரிகளில் 96 கல்லூரிகளுக்கு முதல்வர் இல்லை. பேராசிரியர்கள் பணியிடமும் காலியாக உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன?
மின் கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்தி உள்ளனர். வீட்டு வரி 100 சதவீதமும், கடை வரிக்கு 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். குப்பைக்கும் வரி விதித்து இருக்கின்றனர். அத்தியவாசிய பொருட்கள், கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. கனவில் மட்டும் வீடு கட்டும் நிலையில் மக்கள் உள்ளனர். விழுப்புரம் நகராட்சியை அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
திருநெல்வேலியில் போலீசிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் ரமலான் தொழுகை முடித்து வீடு திரும்பிய ஓய்வு பெற்ற காவலர் ஜாகீர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிறுபான்மை மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையி னரை அரண் போல் பாதுகாக்கப்பட்டனர். மதுரை மாநகராட்சியில் வரி வசூல் செய்ததில், போலி ரசீது தயாரித்து ரூ.200 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.
அரசு அதிகரிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு திமுகவைச் சேர்ந்த மண்டல குழு தலைவர்கள் கேட்டுக்கொண்டதால் செய்ததாக தெரிவித்துள்ளனர். இதனால், மண்டல குழு தலைவர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார் ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன். குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின். 2026-ல் அதிமுக மக்களாட்சி நடத்தும்” என்றார். இதையடுத்து விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனத்தில் பிரச்சாரம் பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக, விழுப்புரம் நட்சத்திர விடுதியில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய பழனிசாமி, நேரு ஜி சாலையில் ரோடு ஷோ சென்று மக்களை சந்தித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமர குரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.