மதுரை: சிறுநீரக திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்தும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறுநீரகம் மற்றும் உடல் உறுப்புகள் திருட்டு தொடர்பாக விசாரிக்க தென் மண்டல ஐ.ஜி. பிரேமானந்த் சின்ஹா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நிஷா, சிலம்பரசன், கார்த்திகேயன், அரவிந்த் ஆகியோர் அடங்கிய சிறப்பு படை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், சிறுநீரக திருட்டு தொடர்பாக உயர் நீதிமன்றம் நியமனம் செய்த சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.