சென்னை: கிராம ஊராட்சிகளில் சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: இது உழைக்கும் வர்க்கத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. விலைவாசி உயர்வு, மின்கட்டணம், குடிநீர் கட்டணம், பால்விலை உயர்வு என தள்ளாடும் சிற்றுண்டிக் கடைகளை மொத்தமாக இழுத்து மூட முடிவு செய்து விட்டதா திமுக அரசு.
ஏழை, எளிய மக்களின் தோள்களின் மீது நிதிச் சுமை ஏற்றப்படுவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. இந்த உரிமக் கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் 48 வகையான உற்பத்தி தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக் கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிக வருவாயும், லாபமும் தரக்கூடிய கடைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்குவதில் தவறு இல்லை.
ஆனால், வாழ்வாதாரத்துக்காக செய்யப்படும் தொழில், வணிகத்துக்கும் உரிமம் பெற வேண்டும் என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். எனவே, இதை திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: கிராமப்புற பஞ்சாயத்துப் பகுதிகளில் உள்ள சிறு, குறு கடைகளுக்குக்கூட உரிமங்கள் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது. குடும்பச் சூழலில் வீட்டோடு சில்லரை வணிகம் செய்துவரும் அடித்தட்டு வணிகர்களையும் இந்த அறிவிப்பு பாதித்துவிடும்.
எனவே, வணிகர்களின் நிலை கருதியும், சாமான்ய வணிகரின் வாழ்வாதாரம் கருதியும் இவ்வறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.