உடுமலை: உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அது குறித்து மாவட்ட எஸ்.பி கிரிஸ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு: கைது செய்யப்பட்ட மணிகண்டனை சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டது. அப்போது கொலைக்கு பயன்படுத்திய அதே அரிவாளை எடுத்து போலீஸாரை தாக்க முயன்றபோது தான் துப்பாக்கியால் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரிவாளை கீழே போடச் சொல்லி பலமுறை அறிவுறுத்தியும் மணிகண்டன் கேட்கவில்லை. 2 முறை துப்பாக்கியால் சுட்டதில் ஒரு குண்டு மணிகண்டன் மீது பாய்ந்து உயிரிழப்பு ஏற்ப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள வாஞ்சிநாதன் நகரில் வசித்து வந்தவர் சண்முகவேல் (57). இவர், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். குடிமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு தங்கி வேலை பார்த்து வந்த மூர்த்தி (66) என்பவருக்கும் அவரது மகன்களுக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
இதில் தொடர்புடைய மூர்த்தி, அவரது மகன்கள் மணிகண்டன், தங்கப்பாண்டி ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இதற்கிடையே, மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டி ஆகிய இருவரும் திருப்பூர் போலீஸில் சரணடைந்தனர். புதன்கிழமை இரவு தனிப்படை போலீஸார் மணிகண்டனை கைது செய்தனர்.
மூவரிடமும் விடிய விடிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தை காண்பிப்பதற்காக மணிகண்டனை அழைத்துக் கொண்டு போலீஸார் சிக்கனூத்து அருகே உள்ள உப்பாறு ஓடையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது என்கவுன்ட்டரில் மணிகண்டன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார் மாவட்ட எஸ்.பி. கிரிஸ் யாதவ்