திருப்பூர்: உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து கிராமம் உள்ளது. அங்கு மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. தோட்டப் பராமரிப்புக்காக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (60) மற்றும் அவரது மனைவி காமாட்சி குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக மூர்த்தியின் மூத்த மகன் மணிகண்டன் (20). அவரது மனைவி சபீனா ஆகியோரும் தங்கி தோட்ட வேலை செய்து வந்தனர்.
நேற்று மூர்த்தியின் 2-வது மகன் தங்கபாண்டி (28) தந்தையை பார்பதற்காக வந்துள்ளார். இரவு கறி விருந்துடன் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் தங்கபாண்டிக்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் மூர்த்தி காயம் அடைந்தார். தகராறு முற்றிய நிலையில் பண்ணை மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் உடனடியாக குடிமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ் ஐ சண்முகவேலுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சண்முகவேல் மற்றும் ஜீப் ஓட்டுநர் அழகுராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, தோட்டத்தில் வேலை செய்யும் நபர்களால் சிறப்பு எஸ்ஐ சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரது சடலம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டது. அங்கே, எம்எல்ஏ மகேந்திரன் மற்றும் அதிமுகவினர், சிறப்பு எஸ்ஐ குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரன், “எனது தோட்டத்தில் மூர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவரது மகன்கள் ஒரு மாதம் முன்பு தான் வந்தனர். அவர்கள் அனைவரது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்கள் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மகன் லலித்குமார் படித்துள்ளார். சண்முகவேல், பணியில் இருக்கும் போது உயிரிழந்ததால் மகன் லலித்குமாருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் எனக் கோருகிறேன்.” என்றார்.
அமைச்சர் ஆறுதல்: சண்முகவேல் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் அமைச்சர் சாமிநாதன். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சண்முகவேல் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின், ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் யார் என்று தெரிந்துள்ளதால் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.” என தெரிவித்தார்