சென்னை: நாட்டின் சிறந்த நிர்வாகத்துக்கு குடிமைப் பணியாளர்கள் தான் முதுகெலும்பு என்று கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் புதிய வளாகம் திறப்பு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் 12-வது ஆண்டு தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு, சென்னை அண்ணா நகர் மற்றும் தஞ்சாவூரில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் புதிய வளாகங்களை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனரும், இயக்குநருமான எம்.பூமிநாதன் தலைமை வகித்தார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: 12 ஆண்டு வெற்றிப் பயணம் நான் சிறுவனாக இருந்தபோது,தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரை ‘கிங் மேக்கர்’ என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டுள்ளேன்.
அந்த வகையில், பல வெற்றியாளர்களை உருவாக்கும் பயணத்தில் 12 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்திருக்கும் கிங் மேக்கர்ஸ் அகாடமிக்கு எனது வாழ்த்துகள். இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய வளாகங்கள் வெறும் செங்கல், கம்பிகளால் ஆன கட்டுமானம் மட்டுமல்ல. இது நமது இளைஞர்களின் கனவுகள், உறுதியை வளர்ப்பதற்கான இடம். இந்த இளைஞர்கள்தான் குடிமைப் பணிகளில் சேர்ந்து அர்ப்பணிப்பு, நேர்மையுடன் நம் நாட்டுக்கு மகத்தான சேவையை வழங்குகின்றனர்.
கிராமப்புற பின்னணியில் உள்ள இளைஞர்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கிங் மேக்கர்ஸ் அகாடமி அதிக அளவில் வாய்ப்பளித்து கல்வி கற்பித்து வருவது பாராட்டுக்குரியது. இந்த அகாடமி நம் இளைஞர்களுக்கு சிறந்த கல்வி அறிவை மட்டுமின்றி, நாட்டில் சிறந்த திறமைசாலிகளுடன் போட்டியிடுவதற்கான நம்பிக்கையையும் வழங்குகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கிங் மேக்கர்ஸ் அகாடமி வழிகாட்டி இருக்கிறது. குறிப்பாக, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த 2 பேரையும், தமிழக அளவில் முதலிடம் பிடித்த 5 பேரையும் இந்த அகாடமி உருவாக்கியுள்ளது. தேசத்தை கட்டியெழுப்ப இதுபோன்ற பங்களிப்புகள் முக்கியமானவை. நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது. எண்ணிலடங்கா மொழிகள், கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. அதற்கு ஏற்ப, அனைத்து சமூக மக்களின் தேவைகளையும் புரிந்து கொண்டு சேவைகளை வழங்குவது அவசியம். நாட்டின் ஒற்றுமைக்கும், சிறந்த நிர்வாகத்துக்கும் முதுகெலும்பாக குடிமைப் பணியாளர்கள் திகழ்ந்து வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசும்போது, “கிங் மேக்கர்ஸ் அகாடமி கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து தரமிக்க, திறமைமிக்க, நேர்மையான குடிமைப் பணிஅதிகாரிகளை உருவாக்கியுள்ளது. இவர்கள் சட்டங்களை செயல்படுத்துவதிலும், மக்களுக்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். திறமையான நிர்வாகத்துக்கு குடிமைப் பணி ஊழியர்கள்தான் முக்கியமான தூண்கள்” என்றார்.
அகாடமியின் நிறுவனர் பூமிநாதன் பேசும்போது, “கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த வேளையில், ‘நாங்கள் கற்பிக்கிறோம், நீங்கள் முன்னேறுங்கள்’ என்ற வகையில் இளம் மனங்களை, குறிப்பாக கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மாணவர்களை வளர்த்து, அவர்களை அர்ப்பணிப்புள்ள குடிமைப் பணி ஊழியராக மாற்றுவதற்கு ஒரு சூழலை உருவாக்கும் எங்களது இலக்கை நோக்கிய பயணத்தின் முக்கிய அடிக்கல்லாக தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த வளாகங்கள் திகழ்கின்றன” என்றார். இந்த நிகழ்வில் கிங் மேக்கர்ஸ்ஐஏஎஸ் அகாடமியின் துணை நிறுவனர் சத்யஸ்ரீ பூமிநாதன்,கவுரவ ஆலோசகர் விவேக் ஹரிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.