சென்னை: சிம்பொனி இசைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் இளையராஜா உருக்கமுடன தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில், இசைஞானி இளையராஜாவின் இசை பயண பொன்விழா ஆண்டையொட்டி ‘ராஜாவைத் தாலாட்டும் தென்றல்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் பேசியதாவது:
நடிகர் ரஜினிகாந்த்: சிம்பொனிக்காக லண்டன் செல்லும் முன்பும் சென்னை திரும்பியதும் அரசு மரியாதையுடன் இளையராஜாவை வாழ்த்தி வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா தான். உலகத்தில் வாழும் தமிழர்களின் ரத்தம், நாடி, நரம்புகளில் எல்லாம் இளையராஜாவின் இசையும், பெயரும் ஊறிப் போயிருக்கிறது.
1980-களில் அவர் இசைத்த பாடல்கள் இரண்டை, இப்போது வெளியாகும் திரைப்படங்களில் சேர்த்தால் அந்த படம் ஹிட் ஆகிவிடும். அவர் இசை பயணத்தின்போது, புதிய இசை அமைப்பாளர்கள் வருகிறார்கள். இளையராஜாவை வைத்து கோடி கோடியாக சம்பாதித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நான் உள்பட எல்லோரும் அந்த பக்கம் சாய்கிறார்கள். அதைப்பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. உண்மையாக, நியாயமாக,கடினமாக உழைத்தால் எல்லாமே பின்னால் வரும். அவருடன் பழகியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.
நடிகர் கமல்ஹாசன்: இளையராஜா எனக்கு அண்ணன் போன்றவர். எங்கள் இருவருக்குமான 50 ஆண்டு கால உறவை எண்ணி மகிழ்கிறேன். அவருக்கு பாராட்டு விழாவை முன்னெடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (தொடர்ந்து ஹேராம் படத்தில் வரும் ‘நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’ எனும் பாடலின் மெட்டுக்கு இளையராஜாவை போற்றி ஒரு பாடலையும் கமல்ஹாசன் பாடினார்.)
துணை முதல்வர் உதயநிதி: தமிழகத்தின் அழிக்க முடியாத அடையாளங்களில் ஒன்று இசைஞானி இளையராஜா. 1988-ல் ‘இசைஞானி’ என்ற பட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார். அவர் பாடல் இல்லாமல் நம் வாழ்க்கை இல்லை. இசை அமைப்பாளர் என்று சொல்வதைவிட இசை மருத்துவர் என்றே கூறலாம்.
விழாவில் ஏற்புரையாற்றி இளையராஜா பேசியதாவது: இசை உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு இசை அமைப்பாளருக்கு பாராட்டு விழா நடத்துவது தமிழக அரசு தான். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நான் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யப்போகிறேன் என்ற உடன் அதற்கு முதல்நாளே வந்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினார். லண்டனில் இருந்து திரும்பி வந்தபோது அரசு சார்பில் வரவேற்றார். தற்போது பாராட்டு விழாவும் நடத்திவிட்டார். இதை என்னால் நம்ப முடியவில்லை.
என்மேல் அவ்வளவு அன்பு வைப்பதற்கு என்ன காரணம், இசைதானா, அவரது அப்பா முன்னாள் முதல்வர் கருணாநிதி சூட்டிய இசைஞானி என்ற பட்டமே எனக்கு பேராகிவிட்டது. அரசு சார்பில் எந்த இசைக்கலைஞனுக்கும் பராட்டு விழா நடந்தது இல்லை. இது இசை உலகின் சரித்திரமாக கருதுகிறேன். இதை என்னால் இன்னும் நம்ப முடியவிலலை. என்ன பேச வேண்டும் என்பதே மறந்துவிட்டது. இசையிலலேயே என் வாழ்க்கை முழுவதும் சென்றது. என்னுடைய குழந்தைகளுக்காக நான் நேரம் செலவழிக்கவில்லை.
அப்படி நேரம் செலவழித்திருந்தால் இந்த சிம்பொனியை அமைத்திருக்க முடியாது. இதேபோல நீங்கள் விரும்பி கேட்கின்ற அவ்வளவு பாடல்களையும் கம்போஸ் செய்திருக்க முடியாது. அதனால், நான் எனது பிள்ளைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிம்பொனி அமைக்கும்போது எந்த சாயலும் இருக்கக் கூடாது. அதையும் மீறி 35 நாட்களில் இந்த சிம்பொனியை அமைத்திருக்கிறேன். சிம்பொனிக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்தேன். சிம்பொனி இசையை பெரிய மைதானத்தில் நடத்த தேவையான உதவிகளை முதல்வர் செய்ய வேண்டும்.