சிவகங்கை: “சிபிஐ விசாரணை வழக்கை தாமதப்படுத்தும் என்பதால் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிசிஐடி விசாரணை தான் வேண்டும்,” என அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட நீதிபதி 3-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே அஜித்குமார் குடும்பத்தினரை மிரட்டி பேரம் பேசியதாக புகார் எழுந்தது.
பேரம் பேசப்பட்டது… இதுகுறித்து அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மடப்புரத்தில் 2 தனியார் மண்டபங்களில் எஸ்பி, டிஎஸ்பி தலைமையில் தனித்தனியாக அரசியல்வாதிகள் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரை துன்புறுத்தி பேரம் பேசியுள்ளனர். அதனை சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர். அதை நீதிமன்றத்தில் சமர்பிப்போம். மேலும் அதுதொடர்பான வீடியோக்கள் இருந்தால் மாவட்ட நீதிபதியிடம் கொடுக்கலாம்.
செல்போன் விவரங்கள் ஒப்படைப்பு: மேலும் சம்பவம் சமயத்தில், அஜித்குமாரை தாக்கிய காவலர்கள் மற்றும் மானாமதுரை டிஎஸ்பி, சிவகங்கை மாவட்ட எஸ்பி, திருப்புவனம் காவல் ஆய்வாளர், நிகிதா உள்ளிட்ட 10 பேருடன் செல்போனில் பேசிய விவரங்களும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கிய நபர்கள் பேசியிருந்தால், அதுகுறித்து தெரியவரும். மாவட்ட நீதிபதி ஜூலை 6-ம் தேதி வரை விசாரண நடத்துவார்.
சாட்சியம் அளிக்கலாம்… அஜித்குமார் கொலை குறித்து தெரிந்திருந்தவர்கள் மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம். எங்களிடமும் தெரிவிக்கலாம். அஜித்குமாரை அழைத்துச் சென்றது, தாக்கியது, இறந்தபின்னர் அவரது குடும்பத்தினரை அச்சுறுத்திப் பேரம் பேசியது என அனைத்து தகவல்களையும் தெரிவிக்கலாம்.
நிகிதாவை விசாரிக்க கோரிக்கை: சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என ஐஜி உறுதியளித்துள்ளார். அதனால் பயப்படாமல் தங்களுக்கு தெரிந்தை தெரிவிக்கலாம். அரசே குற்றத்தை ஒப்புக்கொண்டு 5 பேரை முதல்கட்டமாக கைது செய்துள்ளது. 6-வது குற்றவாளியாக காவல் வாகன ஓட்டுநரையும் சேர்த்துள்ளனர். அவரும் விரைவில் கைது செய்யப்படுவார். நிகிதாவையும் விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளோம்.
சிபிசிஐடி விசாரணை வேண்டும்: போலீஸை பார்த்தாலே சாட்சிகள் பயப்படுவர். எனவே சாட்சிகள், ஆவணங்களை அழிக்கக் கூடாது என்பதற்காக இடைக்காலமாக மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை உயர் நீதிமன்றம் அமைத்தது. அனைத்து ஆவணங்களையும் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைத்துவிட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை மேலும் தாமதமாக்கும். நாங்கள் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிசிஐடி விசாரணையைத் தான் வலியுறுத்துகிறோம். 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சாட்சி சக்தீஸ்வரனுக்கு மட்டுமின்றி மற்ற சாட்சிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.