சென்னை: சென்னையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம், 300 மாற்றுத் திறனாளிகளுக்கு, உதவி உபகரணங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், பேட்டரியால் இயங்கும் 4 சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில், கழிவுநீரகற்று பணி மேற்கொள்வதற்காக, ரூ.1.50 கோடி மதிப்பில் நவீன இயந்திரம் பொருத்தப்பட்ட கழிவுநீரகற்று வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னர், அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளை மாற்றத்துக்கான திறனாளிகளாக நம் முதல்வர் உயர்த்திக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில், மாற்றுத் திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில், நியமன முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்மூலம், 15 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இதுவரை 200 மாற்றுத் திறனாளிகளுக்கு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம், ரூ.5 கோடி வரை நிதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற 200 வீரர்களுக்கு ரூ.25 கோடி பரிசுத் தொகை, கடந்த ஆண்டில் 5 மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விளையாட்டுத் துறை மூலமாக 20 பேருக்கு அரசு வேலை வழங்க நடப்பாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.