சேலம்: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலை செல்வதற்கு வந்த பக்தர்கள், பேருந்துகளில் இடம் பிடிப்பதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலையும், அங்குள்ள மலையையும் பவுர்ணமி நாளில் வலம் வந்து வழிபடுவது, நற்பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், மாதந்தோறும் பவுர்ணமி நாளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு சென்று வருகின்றனர். பவுர்ணமிகளில், சித்ரா பவுர்ணமி வழிபாடு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், சித்திரை மாத முழு நிலவு நாளான, சித்ரா பவுர்ணமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்கள் திருவண்ணாமலை சென்று வர வசதியாக, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய நகரங்களின் பேருந்து நிலையங்களில் இருந்து, பயணிகளின் தேவைக்கேற்ப 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக, பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று காலை முதலே சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வரத்தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே வந்தது. குறிப்பாக, இன்று நண்பகலுக்குப் பின்னர் மாலை வரையிலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இதனால், பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்துகள் அனைத்தும் உடனுக்குடன் பயணிகளால் நிரம்பின. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பக்தர்கள் பேருந்து நிலையத்துக்கு உள்ளே வரத்தொடங்கிய அனைத்துப் பேருந்துகளிலும் நெருக்கியடித்து ஏறினர். எனினும் பேருந்துகளில் பலருக்கும் இருக்கை கிடைக்கவில்லை.
இதனிடையே, பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள சேலம் கோட்ட அரசுப் பேருந்துக்கழகத்தில் பணிமனைக்கு, பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று, அங்கேயே பேருந்தினுள் இடம் பிடித்தனர். இதனால், சேலம் புதிய பேருந்து நிலைய வளாகமும், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையும் பரபரப்பாக இருந்தது.