“வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர். தகுதியானவர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்க வேண்டியது உங்கள் (மாவட்டச் செயலாளர்கள்) கடமை” அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் தேர்தலுக்கான தனது ஆக் ஷன் பிளானை இப்படி அறிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி, தவெக-வின் எழுச்சி இவற்றோடு அமலாக்கத்துறை, நீதிமன்ற நடவடிக்கைள் மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளால் ஆளுங்கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நெருக்கடிகளை சமாளித்து தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைக்க ஆயத்தமாகி வருகிறது திமுக தலைமை.
தேர்தலுக்கான ஸ்டாலினின் ஆக் ஷன் பிளான் குறித்து பேசிய தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர், “உளவுத்துறை கொடுக்கும் சர்வேயும் சபரீசனின் ‘பென் டீம்’ தரும் சர்வே ரிப்போர்ட்டும் உடனுக்குடன் ஸ்டாலினின் தனிப்பட்ட பார்வைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதை கிராஸ் செக் செய்வதற்காக சில தனியார் ஏஜென்சிகள் மூலமும் சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோவையில் தொடங்கி கிருஷ்ணகிரி வரையிலான கொங்கு மண்டலத்தில் உள்ள 64 தொகுதிகளில், 2021 தேர்தலில், அதிமுக – பாஜக கூட்டணி 42 தொகுதிகளை வென்றது. 22 தொகுதிகளில் மட்டுமே திமுக கூட்டணி வென்றது. கொங்கு மண்டலத்தில் கடந்த முறை கைவிட்டுப் போன 42 தொகுதிகளில் பெருவாரியான தொகுதிகளை இம்முறை திமுக கைப்பற்ற வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின்.
அதேபோல், வட தமிழகத்தில் உள்ள 65 தொகுதிகளில் கடந்த முறை 55 தொகுதிகளை திமுக கூட்டணி வென்றது. ஆனாலும் பல தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் இந்த வெற்றி சாத்தியமானது. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, 20 தொகுதிகளில் கடும் போட்டி வரலாம் என சர்வே சொல்கிறது. திமுக-வுக்கு பலவீனமாக உள்ள தொகுதிகளில் தனித்த செல்வாக்கு கொண்டவர்களை வேட்பாளர்களை நிறுத்தி கடுமையாக வேலை செய்தால் தான் அந்தத் தொகுதிகளை வென்றெடுக்க முடியும் எனவும் சர்வே கணித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் முதல்வரின் செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகளின் செயல்பாட்டில் பல இடங்களில் அதிருப்தி இருக்கிறது. இது தேர்தலில் எதிரொலிக்கலாம் என்றும் சர்வே டீம் சொல்லியிருப்பதாக தெரிகிறது.
இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் கட்சிக்குள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறார் ஸ்டாலின். அவரது இந்த நடவடிக்கையில், செயல்படாத நிர்வாகிகளும், அதிருப்திக்கு ஆளாகி இருப்பவர்களும் ஓரங்கட்டப்படுவார்கள். மாவட்டச் செயலாளர்களின் சிபாரிசுப்படி தேர்தலில் சீட் கொடுத்து வந்த முறையையும் இம்முறை மாற்றப் போகிறார் ஸ்டாலின். அதையும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.
அதேசமயம், தொகுதிக்கு 3 பேர் கொண்ட பட்டியலை தயாரிக்கும் பொறுப்பையும் ‘பென் டீம்’ பொறுப்பில் விட்டிருப்பதாகத் தெரிகிறது. தகுதியான வேட்பாளர்கள் என்ற அளவுகோல் எடுக்கப்பட்டிருப்பதால் சிட்டிங் எம்எல்ஏ-க்களில் பாதிப் பேருக்கு மேல் மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை. சாதிய பின்னணி, பணபலம், நற்பெயர், தொகுதியில் தனித்த செல்வாக்கு உள்ளிட்ட தகுதிகளுடன் இம்முறை வேட்பாளர்களைத் தேடுகிறது திமுக. இதனால், கட்சி சாராத, கட்சியில் முக்கிய பதவியில் இல்லாதவர்களுக்கும் கூட இம்முறை வாய்ப்புக் கிடைக்கலாம்” என்றனர்.
ஆட்சியை தக்க வைக்க முதல்வர் ஸ்டாலினின் 2.0 இலக்கை நோக்கிய இந்த அதிரடி ஆக்ஷன் பிளான் கட்சிக்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை!