சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு மற்றும் சென்னையில் இருந்து வெளிவரும் இந்து தமிழ் திசை நாளிதழ் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
சிங்கப்பூரில் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசின் 90-ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6), ‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, தமிழ் முரசு நாளிதழை வெளியிடும் ‘எஸ்பிஎச் மீடியா’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழை வெளியிடும் ‘கேஎஸ்எல் மீடியா’ ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
‘எஸ்பிஎச் மீடியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சான் யெங் கிட், ‘கேஎஸ்எல் மீடியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில், தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் த.ராஜசேகரும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஆசிரியர் கே. அசோகனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பல்வேறு தலைப்புகளில் செய்தி உள்ளடக்கப் பரிமாற்றத்துக்கும் ஆசிய வட்டாரத்தில் இரு நாளிதழ்களின் வளர்ச்சி தொடர்பாக ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை அடையாளம் காணவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும். வட்டார வாசகர்களை எட்டுவதற்கான நீடித்த, நிலைத்தன்மை உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளின் அடிப்படையில், கூட்டாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், இருதரப்பு ஊடகத் தளங்கள் மூலம் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் செய்தல், வட்டார உத்திகள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையிலான திறன் பரிமாற்றம், இருதரப்புக்கும் நன்மை அளிக்கும் எதிர்கால திட்டங்கள் ஆகியவை தொடர்பாகவும் ஒத்துழைக்க இதன்மூலம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.