சென்னை: திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி பாதையில் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், ரயிலின் காலதாமதத்தை கண்டித்து, மின்சார ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், விம்கோ நகர் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை வழித்தடம் முக்கியமானதாகும். இந்த வழித்தடத்தில் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் 3.20 மணி அளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரயில்கள் திருவொற்றியூர், வ.உ.சி நகர், கொருக்குப்பேட்டை ஆகிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதற்கிடையில், விம்கோநகர் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்வதற்காக, ரயிலை எதிர்பார்த்து, 100-க்கும் மேற்பட்ட பயணிகள் 30 நிமிடத்துக்கு மேலாக காத்திருந்தனர். அதேநேரத்தில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், நிலைய அதிகாரி, திருவொற்றியூரில் நின்ற சூலூர்பேட்டை மின்சார ரயிலை விம்கோ நகர் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த ரயில் விம்கோ நகர் நிலையத்தை அடைந்தபோது, இதை மறித்து பயணிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்னல் கோளாறு என கூறி ரயிலை நிறுத்தி வைத்ததை கண்டித்து 15 நிமிடம் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆர்.பி.எஃப் போலீஸார், ஜி.ஆர்.பி போலீஸார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமூகத் தீர்வு ஏற்பட்டதால், சூலூர்பேட்டை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் அவர்கள் ஏறினர். அந்த ரயில் புதன்கிழமை மாலை 4.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது.
இதற்கிடையே, திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயங்கத் தொங்கின. மின்சார ரயில் காலதாமதத்தால், விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பயணிகள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.