சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று (ஜூன் 23) விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் பிரதான வழக்கின் விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.