பந்தலூர் அருகேயுள்ள நச்சேரி காட்டுநாயக்கர் பழங்குடியினர் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் வீடுகட்ட அரசின் உத்தரவு கிடைத்தும், வீடு கட்ட முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யன்கொல்லி எருமாடு செல்லும் சாலையில் நச்சேரி என்ற கிராமத்தில் பண்டைய பழங்குடியினரான காட்டுநாயக்கர் மக்கள், 20 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் செல்லும் சாலையில் முகப்புப் பகுதியில் தனியார் சாலை என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதனை கடந்து சென்றால் ஒரு பகுதியில் தனியார் தோட்டமும், ஒற்றையடிப் பாதையும் உள்ளது. இந்த ஒற்றையடிப்பாதை வழியாக கிராமத்துக் குள் செல்லவிடாமல் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நச்சேரி கிராமத்தில் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினர் மக்கள் காலங்காலமாக வசித்து வரும் நிலையில், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வருகின்றனர். மக்கள் செல்லும் ஒற்றையடிப் பாதையில் தடுப்புச் சுவர் கட்டப் பட்டுள்ளது. இந்த மக்களுக்கு வீடு கட்ட அரசின் உத்தரவு கிடைத்தும், கட்டுமானப் பொருட்களை கொண்ட செல்ல வழியில்லாததால் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது.
பாதை அடைக்கப்பட்டதால் அவசரத் தேவைக்கு மருத்துவமனைக்கு செல்லவும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவும் முடியாமல் தவிக் கின்றனர்.வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், காட்டுவழி பாதையில் சென்று வருகின்றனர். எனவே, ஒற்றையடிப் பாதையில் கட்டப்பட்ட தடுப்புச்சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.