வெள்ளப்புத்தூர்-கரிக்கிலி இடையே அமைந்துள்ள 3.19 கி.மீ. சாலையை சீரமைக்க, முதல்வர் கிராம சாலை திட்டத்தில் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சாலையை சீரமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வனத்துறை ஒப்புதல் வழங்காமல் தாமதப்படு்த்துவதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் அடுத்த வெள்ளப்புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரதான சாலையை பயன்படுத்தி, கரிக்கிலி மற்றும் வெள்ளப்புத்தூர் ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் பணிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், வேடந்தாங்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள கரிக்கிலியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தை மேற்கண்ட சாலையில் பயணித்து, நேரில் சென்று பார்வையிடும் நிலை உள்ளது.
இந்நிலையில், வெள்ளப்புத்தூர்-கரிக்கிலி இடையே அமைந்துள்ள 3.19 கி.மீ. தொலைவுள்ள சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து உள்ளது. இதனால், கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால், மேற்கண்ட சாலையை சீரமைக்க வேண்டும் என 2 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாலையை சீரமைப்பதற்காக முதல்வர் கிராமச்சாலை திட்டத்தில் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், மேற்கண்ட இடம் வனப்பகுதியில் உள்ளதால் சாலையை சீரமைக்க வனத்துறை ஒப்புதல் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கான பணிகளை, ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. எனினும், சாலை பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் வனத்துறை தாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால், நிதி ஒதுக்கியும் சாலை பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, வெள்ளப்புத்தூர், கரிக்கிலி கிராம மக்கள் கூறியதாவது: வனத்துறை மூலம் எந்தவித அடிப்படை வசதிகளும் எங்கள்பகுதிகளில் மேற்கொள்வதில்லை. ஆனால், தமிழக அரசின் திட்டங்கள் மூலம் செயல்படும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்க வனத்துறை தாமதப்படுத்துகிறது.
இதனால், கரிக்கிலி, வெள்ளப்புத்தூர், அண்டவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள சாலையைதான் சீரமைக்க உள்ளனர். ஆனால், இதற்கும் வனத்துறை ஒப்புதல் வழங்க தாமதம் செய்து வருகிறது. அதனால், வனத்துறையின் உயர் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு சாலை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.