திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்தவர் பாலுச்சாமி (32). கடந்த 2016-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த இவர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை வழக்கம்போல் காங்கயம்-பழையகோட்டை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, ராஜீவ் நகர் அருகே சாலையில் தங்கச்சங்கிலி கிடப்பதை பார்த்தார். அந்த தங்கச்சங்கிலியை எடுத்து, காங்கயம் காவல் ஆய்வாளர் செல்வநாயகம், உதவி ஆய்வாளர் கபில்தேவ் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கச்சங்கிலியை தொலைத்தவர்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர். அதில், திருப்பூரை சேர்ந்த கார்த்தி என்பவரது குடும்பத்தினர் தங்கச்சங்கிலியை தொலைத்தது தெரியவந்தது.
அந்த குடும்பத்தினரை காங்கயம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து தங்கச்சங்கிலியை போலீஸார் ஒப்படைத்தனர். காவலர் பாலுச்சாமியை சக போலீஸார், பொதுமக்கள் பாராட்டினர்.