சென்னை: மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டும்போது அந்த பள்ளங்களை சரியாக மூடாமல், சாலையை செப்பனிடாமல் அப்படியே விட்டுச் சென்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது தாராளமாக போலீஸாரிடம் புகார் அளிக்கலாம் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகம் முழுவதும் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிக்காகவும், மின்வாரியம், கழிவுநீர், கேபிள் உள்ளிட்ட இதர பணிகளுக்காகவும் சாலைகளில் பள்ளம் தோண்டும்போது, அந்த பள்ளங்களை சரிவர மூடி, சாலையை செப்பனிடுவதில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்க நேரிடுகிறது. சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கிறது.
குறிப்பாக, மழைநீர் வடிகால் பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டும்போது வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக எச்சரிக்கை பலகைகளோ அல்லது மாற்று வழித்தடங்களோ ஏற்படுத்துவதில்லை. இரவு நேரங்களில் ஒளிரும் வண்ண ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதில்லை என்பதால் முதியவர்கள், சிறுவர்கள் பள்ளங்களில் விழுந்து காயமடையவும், இறக்கவும் நேரிடுகிறது.
எனவே, சாலைகளில் பள்ளம் தோண்டிவிட்டு சரிவர மூடாமல் செல்லும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க போலீஸாருக்கும், உரிய இழப்பீடுகளை வழங்க தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பாக நடந்தது. அப்போது நீதிபதிகள், “மழைநீர் வடிகால் உள்ளிட்ட இதர பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டும்போது அந்த பள்ளங்கள் காரணமாக எத்தனை பேர் இறந்துள்ளனர், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர், எந்தெந்த பகுதியில் அதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது என்பது குறித்து எந்த விவரங்களும் தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மழைநீர் வடிகால் உள்ளி்ட்ட பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டும்போது அந்த பள்ளங்களை சரியாக மூடாமல், சாலையை செப்பனிடாமல் அப்படியே விட்டுச்சென்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது தாராளமாக போலீஸாரிடம் புகார் அளிக்கலாம்” என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.