சென்னை: சாராயம் விற்ற பணத்தில்தான் திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்பட்டுள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கரூர் மாவட்டத்துக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் வந்தபோது, ‘இந்த மாவட்டத்தில் 2 திருடர்கள் இருக்கிறார்கள்.
பெரிய திருடன் செந்தில்பாலாஜி. சின்ன திருடன் செந்தில்பாலாஜி தம்பி’ என பேசியிருந்தார். தற்போது அதே கரூர் மாவட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, ‘உலகமகா உத்தமர் செந்தில்பாலாஜி. உலகத்தில் சிறந்த மனிதர் செந்தில் பாலாஜி தம்பி’ என சான்றிதழ் கொடுத்துள்ளார். யாருக்கு திருடர், ஊழல் பட்டம் கொடுத்தாரோ, அவர்களை வைத்து இன்று முப்பெரும் விழா நடத்தியிருக்கிறார் ஸ்டாலின்.
இந்த விழாவே சாராயம் விற்ற பணத்தில்தான் நடத்தப்பட்டுள்ளது. திமுகவுக்கு எடுபிடி வேலை செய்வதற்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. ஆனால், பாஜக ஒவ்வொரு முறையும் புதிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எனவே, வயிற்றெரிச்சலில் பாஜகவை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சரை பழனிசாமி சந்திக்கும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. எனவே, அவர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும் போது, முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுகவை கபளீகரம் செய்ய சிலர் முயன்றபோது, அதிமுகவை காப்பாற்ற பாஜக தான் உறுதுணையாக இருந்தது என பழனிசாமி சொல்லியிருப்பதை நான் வரவேற்கிறேன். 2016, 2017-ல் பாஜகவை பற்றி பல இடங்களில் பலவிதமாக பேசப்பட்டபோது, தமிழகத்தில் நல்லது செய்வதற்காக மட்டும்தான் பாஜக ஏங்கியது என்ற உண்மையை பழனிசாமி மக்கள் மன்றத்தில் வைத்திருப்பது எங்களின் வாதத்துக்கும் இன்னும் வலிமை சேர்த்துள்ளது. மக்கள் நலனுக்காக பாஜக இருக்கிறது என்பதை பழனிசாமி உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான் என அமித் ஷா அறிவித்துள்ளார். எனவே, பழனிசாமியை முதல்வராக்குவதற்கு பாஜக தொண்டர்கள் பாடுபடுவார்கள். டிடிவி.தினகரனை இன்னும் ஓரிரு நாட்களில் நேரில் சந்திக்க இருக்கிறேன். தமிழகத்தின் நலனுக்காக கூட்டணியில் இணைவது குறித்து மீண்டும் வலியுறுத்துவேன். நான் சம்பாதித்த பணத்தில் விவசாய நிலம் வாங்கினாலும், அதற்கும் நான் விளக்கம் கொடுக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகள் நான் விவசாயம் செய்வதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.